சித்த மருத்துவம் வர்மம் மருத்துவம் மூலிகை அதிசயம் வீட்டு வைத்தியம் தொடர்புக்கு

சித்தமருத்துவம் தமிழ்நாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்டதாகும். சித் என்றால் உயிர். உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவைச் சரியாக பராமரித்தால் நீண்ட காலம் வாழலாம் என்ற உண்மையை அறிந்தவர்கள் சித்தர்கள்.

நமது உடல் பரு உடல், நுண்ணுடல், காந்த உடல் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1. பஞ்ச பூதத்தாலானது பரு உடல் ( தூல் உடல் ) 2. விண் நிலையில் உடல் முழுவதும் சுழன்றோடும் உயிர்-நுண்ணுடல் ( சூக்கும உடல் ) 3. உயிர்த்துகள்களிலிருந்து அலையலையாக வெளிப்படும் காந்தமே காந்த உடல் அல்லது காரண உடல்.

ஒருவர் எந்த நாட்டில், எந்த இடத்தில் வெப்ப தட்ப நிலையில் பிறந்து வாழ்கின்றாரே அந்த சூழலில் அமைந்துள்ள தாவரங்களே அவர்களுக்கு ஏற்ற உணவாக அமைந்து விடுகின்றன. அப்பகுதியில் ஏற்படுகின்ற வெப்ப, தட்ப மாறுதல்கள், அவற்றால் ஏற்படுகின்ற உடல் நோய்கள் ஆகியவற்றை அப்பகுதியில் உள்ள தாவரங்களை கொண்டே சரிசெய்துவிடமுடியும் என்பதே சித்தர்களின் முக்கிய கோட்பாடாகும்.

காரண உடலாக உள்ள நமது சீவகாந்தத்திற்க்கும் சுற்றுப்புறச்சூழலாக உள்ள இயற்கையில் அமைந்துள்ள வான்காந்தத்திற்கும் உள்ள உறவினை தம் அறிவு திறத்தால் உணர்ந்து, அவ்விரண்டிற்கும் முறையான சமன்பாட்டைப் பராமரிக்கும் முறையே சித்தமருத்துவமாகும்.

அகத்தியர், போகர், புலிப்பாணி, கோரக்கர், தேரையர், மச்சமுனி, இராமதேவர், திருமூலர், சட்டைமுனி, கொங்கணார், கருவூரார், யூகி ஆகியோர் சித்த மருத்துவத்தில் குற்ப்பிடத்தக்கவர்கள்.

மூச்சை முறையாக கையாள்வதன் மூலம் வாழ்நாளை நீடிக்க முடியும் எனக்கண்டவர்கள். உடலைப் பராமரிக்கும் முறைகளைக் காயசித்தி என்று பகுத்துள்ளார்கள். சித்த மருத்துவம் வாதம், மருத்துவம், யோகம், ஞானம் என்ற நான்கு அங்கங்களைக் கொண்டதாகும்.

வான்கோடுகளுக்கும் மனித உயிரியக்கத்திர்க்கும் அதனால் உடல் நலத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை ந்ன்குணர்ந்தவர்கள் சித்தர்கள். ஒருவரின் தோற்றம், இயக்க இயல்புகள், நிலவும் கால நிலை இவற்றை வைத்தே அவருக்குள்ள நோய்களைக் கண்டறியும் முறைகளை வகுத்துள்ளனர் சித்தர்கள்.

வாதம், பித்தம், கபம்

ஒவ்வொருவரின் உடல் நலமும் வாதம், பித்தம், கபம் ( சிலோத்துமம் ) ஆகிய மூன்று அடிப்படை ஆதாரங்களை வைத்தே அமைந்திருப்பதை விளக்கியவர்கள் சித்தர்கள். அந்த அடிப்படையிலேயே நோயைக் கண்டறியும் முறைகளையும் வகுத்துள்ளனர்.

உடலில் வாத , பித்த, கப ஏற்றத்தாழ்வை கைநாடியைப் பிடித்து உணர்ந்தே நோய்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து குணப்படுத்தும் முறையை அறிந்திருந்தார்கள்.

வாத, பித்த, கப அளவின் ஏற்றத்தாழ்வால் நோய்கள் தோன்றுகின்றன. அது சுவைகளாகிய புளிப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம், உவர்ப்பு இவற்றுள் ஏதேனும் குறைவுபட்டால் அதனால் தோன்றக்கூடிய நோயை அக்குறை நீக்கக்கூடிய சுவையுடைய உணவைக் கொண்டே சரி செய்துவிடும் சிறப்புடையது சித்த மருத்துவம்.